என் மலர்
இந்தியா

Code word: 'பிரியாணி' .. டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க பாகிஸ்தான் பயங்கரவாதி பயிற்சி
- ஜம்மு காஷ்மீரின் ஷோபியானைச் சேர்ந்த மத அறிஞர் மௌல்வி இர்பான் அகமது மூலம் ஹன்சுல்லா டாக்டர் ஷகீலைத் தொடர்பு கொண்டார்.
- வெடிபொருட்களை 'பிரியாணி' என்றும் தாக்குதலை 'தாவத்' என்றும் கூறி அவர்கள் தங்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டனர்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முசாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியான் பகுதியைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே என 4 பேர் நேற்று என்ஐஏ காவலில் எடுக்கப்பட்டனர்.
டெல்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த சதியில் ஈடுபட்ட மருத்துவர்கள் கும்பலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி 'ஹன்சுல்லா' என்பவர் வெடிகுண்டு தயாரிப்பதில் ஆன்லைனில் பயிற்சி அளித்ததாக விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'ஹன்சுல்லா' என்பது மாற்றுப்பெயர் என்று நம்பப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் முசாமில் ஷகீலுக்கு குண்டுகள் தயாரிப்பது தொடர்பான 40 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அனுப்பப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, ஜம்மு காஷ்மீரின் ஷோபியானைச் சேர்ந்த மத அறிஞர் மௌல்வி இர்பான் அகமது மூலம் ஹன்சுல்லா டாக்டர் ஷகீலைத் தொடர்பு கொண்டார்.
முதலில் ஷகீலை பயங்கரவாதத்திற்குத் தூண்டிய மௌல்வி, பின்னர் பரிதாபாத்தில் உள்ள அல் பாலா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மற்ற மருத்துவர்களை அந்தக் கும்பலில் சேரச் செய்தார்.
வெடிபொருட்களை கொண்டு செல்வதிலும், தற்கொலைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரை பயங்கரவாதி உமர் முகமதுவிடம் ஒப்படைப்பதிலும் ஷகீல் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை நிறுவனங்களின் கவனத்தைத் திசைதிருப்ப அந்தக் கும்பல் டெலிகிராம் செயலியில் சிறப்பு குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தியது.
வெடிபொருட்களை 'பிரியாணி' என்றும் தாக்குதலை 'தாவத்' என்றும் கூறி அவர்கள் தங்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டனர்.
டெல்லி, குருகிராம் மற்றும் பரிதாபாத்தின் முக்கிய பகுதிகளில் தாக்குதல்களுக்காக 200 சக்திவாய்ந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகம் இந்த பயங்கரவாத சதியின் மையமாக மாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவேத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த பரிதாபாத் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.






