என் மலர்
இந்தியா

வாடிக்கையாளர் திருப்தியில் முதலிடம் பெற்ற போபால் விமான நிலையம்
- நாடு முழுவதும் 58 விமான நிலையங்களில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
- அசாம் மாநிலத்தின் ருபாசி விமான நிலையம், 3 புள்ளிகள் மட்டுமே பெற்று கீழ்மட்டத்தில் உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவை அளிக்கும் விமான நிலையம் எது என்பது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் நாடு தழுவிய ஆய்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 58 விமான நிலையங்களில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட முதல் சுற்று ஆய்வில், மத்தியபிரதேச மாநிலத்தின் போபால், கஜுராஹோ, ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் ஆகிய விமான நிலையங்கள், முழு மதிப்பெண்களான 5 பெற்று முதலிடம் பிடித்தன.
கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட 2-வது சுற்று ஆய்வில், போபால், கஜுராஹோ, மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சாம்பாஜிநகர் ஆகிய விமான நிலையங்கள் 5-க்கு 4.99 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தன.
அசாம் மாநிலத்தின் ருபாசி விமான நிலையம், 3 புள்ளிகள் மட்டுமே பெற்று கீழ்மட்டத்தில் உள்ளது. சிம்லா (இமாச்சலபிரதேசம்), பாவ்நகர் (குஜராத்), தேஸ்பூர் (அசாம்), கலபுர்கி (கர்நாடகா) ஆகிய விமான நிலையங்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை.
மத்தியபிரதேச மாநிலம் சாதர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராஹோ, கோவில் சிற்பங்களுக்கு புகழ் பெற்றது. அங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். உலகத்தரம் வாய்ந்த பயணியர் சேவைகள், சிறிய நகரங்களுக்கும் கிடைப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ''கஜுராஹோ விமான நிலையம், ஒரே ஆண்டில் 2 தடவை முதலிடம் பெற்றிருப்பது, ஒட்டுமொத்த குழுவின் அர்ப்பணிப்பு உணர்வை காட்டுவதாக கஜுராஹோ விமான நிலைய இயக்குனர் சந்தோஷ் சிங் தெரிவித்தார்.






