search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்ஆர்ஐ இந்திய பெண் வங்கி கணக்கில்  ரூ.15 கோடி மோசடி செய்த மேலாளர்
    X

    என்ஆர்ஐ இந்திய பெண் வங்கி கணக்கில் ரூ.15 கோடி மோசடி செய்த மேலாளர்

    • மேலாளர், 6 சதவீத வட்டி கிடைக்கும் என அறிவுறுத்தி ஸ்வேதாவை கணக்கு தொடங்க வைத்தார்
    • புது மேலாளர் பதவியேற்றதும் ஸ்வேதாவிற்கு பணம் திருடு போனது தெரிய வந்தது

    கடந்த 2016ல், வெளிநாடு வாழ் இந்தியர்களான ஸ்வேதா சர்மா (Shveta Sharma) என்பவரும் அவர் கணவரும் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளில் இரு தசாப்தங்களுக்கும் மேல் வசித்து விட்டு இந்தியாவிற்கு திரும்பினர்.

    இந்தியாவின் பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) மேலாளர் ஒருவர் அந்த தம்பதியினருக்கு அறிமுகமானார்கள்.

    அந்த மேலாளர், அமெரிக்காவில் அத்தம்பதியினர் ஈட்டிய வருவாயை அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்தால், வட்டி விகிதம் மிக குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவில் 6 சதவீதம் வரை வட்டி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறி அவர் வேலை பார்க்கும் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்ய அறிவுறுத்தினார்.

    ஸ்வேதா பெயரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கணக்கு ஒன்றை அந்த வங்கி மேலாளர், டெல்லியின் பழைய குருக்ராம் பகுதியில் உள்ள தான் வேலை பார்க்கும் ஐசிஐசிஐ வங்கியில் தொடங்க உதவி செய்தார்.

    2019 செப்டம்பர் மாதத்திலிருந்து 2023 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஸ்வேதா இந்த புதிய கணக்கிற்கு அமெரிக்காவிலிருந்து தனது சேமிப்புகளை மாற்றினார்.

    இந்த நிதி பரிமாற்றங்கள் அனைத்திற்கும் மேலாளர் வங்கி ரசீதுகள் வழங்கி மின்னஞ்சல்களையும் அனுப்பி வந்தார். இவை தவிர முறையாக உறையிட்ட கோப்புகளையும் அனுப்பி வந்தார்.

    2024 ஜனவரி மாதம் புது மேலாளர் அந்த வங்கியில் பதவியேற்றார். அவருடன் புதிய வங்கி சேமிப்பு திட்டங்கள் குறித்து பேசும் போது ஸ்வேதாவின் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஸ்வேதா இழந்துள்ள தொகை அசல் மட்டும் ரூ. 15,74,92,140.00 ($1.9 மில்லியன்) என தெரிய வந்துள்ளது. இதற்கான வட்டியுடன் கணக்கிட்டால் இது மேலும் பல லட்சங்கள் அதிகரிக்கும்.

    ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் (autoimmune disorder) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்வேதா, இந்த மோசடியினால் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தனியார் வங்கி நடத்திய ஆய்வில் மோசடி நடந்திருப்பது உண்மை என்றும், ஸ்வேதாவிற்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என்றும் அவரது பணம் மொத்தமும் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "நான் செய்யாத தவறுக்கு பழி வாங்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. எனக்கு உறக்கமே வரவில்லை" என வேதனையுடன் தெரிவித்தார் ஸ்வேதா.

    அந்த வங்கி மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு துறை மற்றும் வங்கி இணைந்து வழக்கை விசாரித்து வருகிறது.

    Next Story
    ×