என் மலர்
இந்தியா

பொது இடங்களில் உணவளிக்க தடை.. தெருநாய்கள் குறித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அம்சங்கள்
- இந்த பெஞ்ச் முந்திய 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது.
- ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனித்தனி தங்குமிடங்களில் வைக்க வேண்டும்.
டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 8 அன்று உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து நாய் பிரியர்கள் செய்த மேல்முறையீடு 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. இந்த பெஞ்ச் முந்தைய 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது.
அதில்,
பொது இடங்களில் மக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி வார்டுகளில் நிர்வாகம், உணவளிக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும்.
இந்த உத்தரவை டெல்லி உடன் நிறுத்திக்கொள்ளாமல் நாடு முழுவதும் விரிவு படுத்த இந்தியா முழுவதும் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புகிறோம்.
கருத்தடை, தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு நாய்களை அதே பகுதிக்கு விடுவிக்க வேண்டும். இருப்பினும், ரேபிஸ் அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனித்தனி தங்குமிடங்களில் வைக்க வேண்டும்.
விலங்கு ஆர்வலர்கள் நாய்களைத் தத்தெடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். நாய்கள் மீண்டும் தெருக்களுக்குத் திரும்பாமல் இருப்பதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும்.
எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்பும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தலையிட முடியாது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த நாய் பிரியர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ரூ.25,000 மற்றும் ரூ.2 லட்சத்தை பதிவாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.






