என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களில் மோசமான உணவு வழங்கப்பட்டதாக 319 புகார்கள்
    X

    கேரளாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களில் மோசமான உணவு வழங்கப்பட்டதாக 319 புகார்கள்

    • படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை ரெயில்வே துறை விரைவிலேயே இயக்க உள்ளது.
    • திருவனந்தபுரம்-காசர்கோடு, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    திருவனந்தபுரம்:

    ரெயில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் பலவிதமான புதிய ரெயில்களையும் அறிமுகப்படுத்துகிறது. அதில் ஒன்று தான் வந்தே பாரத் ரெயில்.

    முழுவதும் குளிர்சாதன வசதியுடன், பயணிகள் உட்கார்ந்து பயணிக்கும் வகையிலான இந்த ரெயில்கள் பல மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் விரைவான பயணம், உணவு உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கு கிடைக்கின்றன.

    இதனால் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை ரெயில்வே துறை விரைவிலேயே இயக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    அனைத்து மாநிலங்களிலுமே உணவு தொடர்பாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபடி இருந்து வருகிறது. கேரள மாநிலத்திலும் வந்தே பாரத் ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரை திருவனந்தபுரம்-காசர்கோடு, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் அதற்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    தரமற்ற உணவு வழங்கியதாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தது. இந்தநிலையில் கேரளாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கியதாக ஏராளமான புகார்கள் கொடுத்திருப்பதும், உணவு ஒப்பந்த நிறுவனம் லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தியிருப்பதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது.

    வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கடந்த 9 மாதத்தில் மொத்தம் 319 புகார்கள் வந்துள்ளன. மேலும் உணவு சப்ளை செய்துவரும் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டும் ரூ14.87லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

    அந்த தொகையை ஒப்பந்த நிறுவனம் செலுத்தியிருப்பது தகவல் அரியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. வந்தே பாரத் ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கொடுக்கப்பட்டிருக்கும் புகார்கள் தொடர்பாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×