என் மலர்tooltip icon

    இந்தியா

    மிகைப்படுத்தப்படும் நாய்க்கடி புள்ளிவிவரங்கள்?  உச்ச நீதிமன்றத்தில் தனியார் தொண்டுநிறுவனங்கள் வாதம்
    X

    மிகைப்படுத்தப்படும் நாய்க்கடி புள்ளிவிவரங்கள்? உச்ச நீதிமன்றத்தில் தனியார் தொண்டுநிறுவனங்கள் வாதம்

    • ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவது சாத்தியமற்றது
    • பொதுப் பாதுகாப்பு விஷயங்களில், 'வருமுன் காப்பதே சிறந்தது'

    உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.

    நவம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற கடைசி விசாரணையின்போது, நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இருந்து தெருநாய்களை அகற்றுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கருத்துகள் சில;

    நாயின் மனதை படிக்கமுடியாது

    விசாரணை தொடர்ந்தபோது, ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. பொதுப் பாதுகாப்பு விஷயங்களில், 'வருமுன் காப்பதே சிறந்தது' என்றும் வலியுறுத்தியது.

    மாநிலங்களின் மோசமான ஒத்துழைப்பு

    விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடு (Animal Birth Control) மற்றும் அவற்றிற்கான இருப்பிடங்களை உருவாக்குவது தொடர்பான செயல்பாட்டு அறிக்கைகளை 10 மாநிலங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் காட்டாதது அல்லது அரசின் அலட்சியத்தன்மையை (மெத்தனப் போக்கை) காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நிறுவன தோல்வி

    பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான பொது இடங்களை தெருநாய்களின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதில் உள்ள 'கட்டமைப்பு ரீதியான தோல்வி' குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது கவலையைத் தெரிவித்தது. பாதுகாப்புக்காக இந்த இடங்களிலிருந்து தெருநாய்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், மீண்டும் அந்த இடங்களிலேயே அவை விடப்படக்கூடாது என்றும் நவம்பர் 7 அன்று தான் பிறப்பித்த உத்தரவை அது சுட்டிக்காட்டியது.

    நிர்வாக சிக்கல் மற்றும் செலவுகள்

    நீதிபதிகளின் கருத்துகளுக்கு மத்தியில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, இந்தியாவில் சுமார் 5.25 கோடி தெருநாய்கள் இருப்பதாகவும், அவற்றைப் பராமரிக்க 77,000 தங்குமிடங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார். அவற்றுக்கு உணவளிக்க தினமும் சுமார் ரூ.62 கோடி செலவாகும் என்று தெரிவித்த அவர், இதில் உள்ள நிர்வாக சிக்கல்களை விளக்கினார்.

    சமூக நாய்கள் மற்றும் தெரு நாய்கள்

    விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தெரு நாய்களுக்கும், நிறுவனப் பகுதிகளில் காணப்படும் நாய்களுக்கும் இடையே வேறுபாடு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிறுவனப் பகுதிகளில் உள்ள நாய்களை "சமூக நாய்கள்" என்று குறிப்பிட்ட அவர், அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்குப் பதிலாக, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் (ABC) கீழ் நிர்வகிக்க வேண்டும் என்றார்.

    தற்போதைய சட்டங்களின் கீழ் நாய்களுக்கு உணவளிப்பதன் சாத்தியக்கூறுகளையும் சிபல் கேள்வி எழுப்பினார். அதற்கான மிகப்பெரிய செலவுகளையும், நிர்வாக தேவைகளையும் யார் ஏற்பார்கள் என்று கேட்ட அவர், நாய்களைப் பெருமளவில் நிறுவனங்களில் அடைப்பதற்கு எதிராகவும் வாதிட்டார்.

    மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள்

    இந்த வழக்கில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வ்ஸ், நாய் கடி தொடர்பான புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தி காட்டப்படுவதாக வாதிட்டார். மேலும், ஒவ்வொரு ரேபிஸ் தடுப்பூசியையும் ஒரு தனித்தனி நாய் கடி வழக்காகக் கணக்கிடுகிறார்கள், அதாவது ஒரு நாய் கடி சம்பவம் என்பது 5 முதல் 7 தனித்தனி வழக்குகளாகக் கணக்கிடப்பட வாய்ப்புள்ளது என்றுக் கூறினார்.

    நெடுஞ்சாலை பாதுகாப்பு

    இந்திய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள் (நாய்கள் மற்றும் கால்நடைகள் இரண்டும்) குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாகத் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியது. சமீபத்திய விபத்துகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாலைகளில் தடுப்புகளை (Barricades) அமைப்பது குறித்து NHAI மற்றும் மாநில அரசுகளிடம் விளக்கம் கோரியுள்ளது.

    எண்ணிடலங்கா மனுக்கள்

    இந்த வழக்கு தொடர்பாகத் தங்களுக்கு வந்துள்ள மனுக்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் தனது வியப்பை வெளிப்படுத்தியது. 'பொதுவாக மனிதர்கள் தொடர்பான வழக்குகளில் கூட இவ்வளவு விண்ணப்பங்கள் வருவதில்லை' என்றும் குறிப்பிட்டது.

    Next Story
    ×