என் மலர்
இந்தியா

சபரிமலையில் அப்பம், அரவணை பிரசாதம் தேவையான அளவு இருக்கிறது: மந்திரி தகவல்
- மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது.
- 18-ம் படிக்கு கீழ் பகுதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை:
மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று கார்த்திகை 1-ந்தேதி முதல் வழக்கமான சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் பகுதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
முன்னதாக கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் மந்திரி தலைமையில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மண்டல, மகர விளக்கு சீசனுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மனநிறைவுடன் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து உள்கட்டமைப்பு வசதிகள் உடனுக்குடன் செய்து முடிக்கப்படும். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதை உடனடியாக கண்டறிந்து சரி செய்யப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
சன்னிதானத்தில் தற்போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 21 லட்சம் டின் அரவணை, 3.25 லட்சம் அப்பம் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






