என் மலர்
இந்தியா

பண்ணைவீட்டில் மறைத்து வைத்த பழைய சேலை.. பிரஜ்வல் ரேவண்ணாவின் விதியை தீர்மானித்த ஆதாரம்!
- அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் வைத்திருந்தார்.
- போலீசார் பண்ணை வீட்டை சோதனை செய்து, மாடியில் இருந்து சேலையைக் கைப்பற்றினர்.
முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்த 2,900 வீடியோக்கள் கடந்த ஆண்டு கசிந்தன.
47 வயது பணிப்பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த வாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பண்ணை வீட்டின் மாடியில் இருந்த பழைய சேலை, குற்றத்தை நிரூபிக்க முக்கிய ஆதரமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, பிரஜ்வல் ரேவண்ணா பாதிக்கப்பட்ட பெண்ணின் சேலையை வலுக்கட்டாயமாக பறித்து வைத்திருக்கிறார். சேலையை அழிப்பதற்கு பதிலாக, அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் பிரஜ்வல் அதை தனது பண்ணை வீட்டின் மாடியில் அதை மறைத்து வைத்திருந்தார்.
விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரிடம் சம்பவத்தன்று என்ன அணிந்திருந்தீர்கள் என்று போலீசார் கேட்டபோது, சேலையை அவர் திருப்பித் தரவில்லை என்றும், அது பண்ணை வீட்டில் இருக்கலாம் என்றும் அப்பெண் கூறினார்.
இந்தத் தகவலின் பேரில், போலீசார் பண்ணை வீட்டை சோதனை செய்து, மாடியில் இருந்து சேலையைக் கைப்பற்றினர். அது தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதில் விந்துவின் தடயங்கள் இருப்பதை உறுதி செய்தது. டிஎன்ஏ சோதனையில், அது பிரஜ்வாலின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனது.
இந்தச் சேலையுடன், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமும் வழக்கின் விசாரணையில் முக்கியமானதாக மாறியது.
சேலையில் காணப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் பிரஜ்வாலுக்கு எதிரான அரசுத் தரப்பு வழக்கை வலுப்படுத்தின. இது இறுதியில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க உதவியது.






