என் மலர்
இந்தியா

மீண்டும் அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் அமித் ஷா
- மத்திய அமித்ஷா முதல் முறையாக தமிழகம் வந்ததால் அவர் முன்னிலையில் மையக்குழு கூட்டம் நடந்தது.
- எல்லா இடங்களிலும் ஆளும்கட்சி மீது அதிருப்தி இருப்பதையும் விளக்கி பேசினார்கள்.
தமிழக பாஜக கட்சியின் மையக்குழு கூட்டம் மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
பா.ஜனதாவை பொறுத்த வரை மையக்குழுதான் உயரிய அதிகாரம் படைத்தது. மிக முக்கியமான முடிவுகள் எடுப்பது, செயல் திட்டங்கள் வகுப்பது எல்லாம் இந்த கூட்டத்தில்தான் நடைபெறும்.
அந்த வகையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்த பிறகு மத்திய அமித்ஷா முதல் முறையாக தமிழகம் வந்ததால் அவர் முன்னிலையில் மையக்குழு கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், அண்ணா மலை, முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், வானதிசீனிவாசன், எச்.ராஜா, சக்கரவர்த்தி, வினோஜ்செல்வம், கரு.நாகராஜன், ராமசுப்பிரமணியன், கருப்பு முருகானந்தம்,
கார்த்தியாயினி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்பட 22 உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களிடமும் நமது கூட்டணி மற்றும் களநிலவரம் பற்றி கேட்டார். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள். பேசியவர்கள் அனைவருமே பலமான கூட்டணியை அமைத்து தந்திருப்பதை வரவேற்றனர். எல்லா இடங்களிலும் ஆளும்கட்சி மீது அதிருப்தி இருப்பதையும் விளக்கி பேசினார்கள்.
எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பிறகு, அமித்ஷா அவர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் மக்களிடம் செல்லுங்கள்.
பா.ஜனதா அரசு நாட்டை முன்னேற்ற செய்து வரும் மகத்தான சாதனைகளை எடுத்து சொல்லுங்கள். அதன் மூலம் அவர்களை கவருங்கள். இந்த பணிகள் பூத் அளவில் இருந்து தொடங்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. இந்த கால கட்டத்தில் திட்டமிட்டு நீங்கள் செய்யும் பணிகள்தான் வெற்றியை தேடி தரும். மற்ற மாநி லங்களைப் போல் தமிழ்நாட்டிலும், இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். மீண்டும் அடுத்த மாதம் (ஜூலை) தமிழ் நாட்டுக்கு வருவேன் என்றார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






