search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்: அமித்ஷா
    X

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்: அமித்ஷா

    • மத்திய அரசின் திட்டங்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 60 முதல் 70 சதவீத வாக்காளர்களின் வாழ்வில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.
    • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய மந்திரி அமித்ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வருமாறு:-

    மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளது. இது குறிப்பாக நகர்ப்புற மற்றும் இளம் வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே 3 மாநிலங்களிலும் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். 1995-ம் ஆண்டு முதல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து அருகிறது. கடந்த முறை, இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை காங்கிரஸ் நிறுத்தியது. வளர்ச்சி திட்டங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், சில மாதங்களிலேயே அங்குள்ள மக்கள் காங்கிரஸ் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில், கர்நாடகாவில் பா.ஜ.க., அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    கடந்த முறை இதே காலகட்டத்தில் 5 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. ஆனால் பாராளூமன்ற தேர்தலில் இந்த மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றோம். நீங்கள் 2024 வரை காத்திருங்கள். முன்பைவிட கூடுதலான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார்.

    எதிர்க்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லை. மத்திய அரசின் திட்டங்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 60 முதல் 70 சதவீத வாக்காளர்களின் வாழ்வில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. கொரோனா பாதிப்பின்போது கிடைத்த இலவச தானியங்கள், மின்சாரம், தண்ணீர், எரிவாயு, கழிப்பறைகள், ரூ.5 லட்சம் வரையிலான ஆயுஷ்மான் பாரத், குழந்தைகளுக்கான கல்வி முறை போன்றவை சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன.

    ஜி20 மாநாடு, புதிய பாராளுமன்ற கட்டிடம், சந்திரயான் நிலவை அடைந்தது போன்றவை மக்களின் வாழ்விலும் மனதிலும் பா.ஜ.க. மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மோடி அரசு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. மோடி அரசின் நல்லாட்சியால் ஒவ்வொரு பிரிவினரும் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில்தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம்.

    தேர்தலை மனதில் வைத்து நாங்கள் முடிவுகளை எடுப்பதில்லை. அதை தேர்தலுடன் இணைக்கக்கூடாது. ஒவ்வொரு வரையும் ஜன்தன் கணக்குடன் இணைக்கும் விவகாரம் வந்தபோது, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்ற முடிவு எடுக்கப்பட்டபோதும், எரிவாயு வழங்க முடிவு எடுக்கப்பட்டபோதும் தேர்தல் நடக்கவில்லையே. இது அரசின் வேலை. இதை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.

    நாட்டின் மிகப்பெரிய பலம் இளைஞர்கள், அந்த இளைஞர்களின் மனதில் இந்தியாவின் வலுவான எதிர்காலம் என்ற பிம்பத்தை உருவாக்குவதில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். இந்த உற்சாகம் இந்தியாவுக்கு பலம் கொடுப்பதோடு, பா.ஜ.க.வுக்கும் பலத்தை அளிக்கிறது. மக்கள் கண்ணியமாக, தலை நிமிர்ந்து வாழும் வலிமை பெற்றுள்ளனர். பா.ஜ.க.வின் அரசியல் செயல்திட்டம் தங்க இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே. அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை.

    பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ராமர் கோவில் என்பது அரசியலின் விஷயமாக இருந்ததில்லை, ராம ஜென்ம பூமியும், ஸ்ரீராமரும் எண்ணற்ற மக்களின் நம்பிக்கையின் சின்னங்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது அந்த நம்பிக்கைக்கு மரியாதை. இதை தேர்தல் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற உள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள சனாதனிகளுக்கும் பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும். இந்த 550 ஆண்டுகால மோதல், மோடி பிரதமராக இருக்கும்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில், லட்சக்கணக்கான கர சேவகர்களுக்கும், மறைந்த அசோக் சிங்கால் போன்ற தலைவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×