search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி நடைபாதையில் மேலும் 5 சிறுத்தை நடமாட்டம்- வனத்துறையினர் அதிரடி ஆய்வு
    X

    திருப்பதி நடைபாதையில் மேலும் 5 சிறுத்தை நடமாட்டம்- வனத்துறையினர் அதிரடி ஆய்வு

    • வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது.
    • நடைபாதை அருகே சிறுத்தை சுற்றி திரியும் இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் நடந்து சென்றார். லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

    இதையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகளில் 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. வன விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பக்தர்களுக்கு கம்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நடைபாதைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் 3 சிறுத்தைகளும், அலிபிரி நடைபாதையில் 2 சிறுத்தைகளும் சுற்றித் திரிவது தெரிய வந்தது.

    நடைபாதை அருகே சிறுத்தை சுற்றி திரியும் இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

    வன விலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாப்பது குறித்து நேற்று திருப்பதி தேவஸ்தானத்தில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் டோரடூனை சேர்ந்த இந்திய வனவிலங்கு நிறுவனம், இயற்கைகளுக்கான உலகளாவிய நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள புலிகள் பாதுகாப்பு சங்கம், மாநில வனத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு சில இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் வன விலங்குகளிடம் இருந்து பக்தர்களை முழுமையாக பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×