search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சக பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரம் - ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
    X

    சக பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரம் - ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்

    • விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
    • விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து விட்டதாக எழுந்த புகார், இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக சங்கர் மிஷ்ரா மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 294 (பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல்), 354 (பெண்ணை மானபங்கப்படுத்துதல்). 510 (குடிபோதையில் பொது இடத்தில் ஒழுங்கின்றி நடந்து கொள்ளுதல்) மற்றும் ஏர் இந்தியா விதிகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சங்கர் மிஸ்ரா கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 4 மாதங்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க நேற்று முன்தினம் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    இந்த விவகாரம், சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தின் கவனத்துக்கு கடந்த 4-ம் தேதிதான் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவின் பொறுப்பு கூறல் மேலாளர், விமான சேவை இயக்குனர், விமானிகள், சிப்பந்திகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில், ஒழுங்குமுறை கடமைகளை மீறியதில் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களிடம் இருந்து அதற்கான பதில்கள் பெறப்பட்டன. அவற்றை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் பரிசீலனை செய்தது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சம்பவம் அரங்கேறிய விமானத்தின் விமானியின் லைசென்ஸ் 3 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான சேவைகள் இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் நடவடிக்கைகளை ஏற்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    Next Story
    ×