search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: பாராளுமன்றத்தில் கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
    X

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: பாராளுமன்றத்தில் கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

    • எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், அவை தொடங்கிய அடுத்த நிமிடமே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
    • பாராளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து முழக்கங்களை எழுப்பினர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும் பாஜகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 9 தினங்களாக முடங்கியது.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்பு வழங்கியது.

    அதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பாரளுமன்றத்தில் காங்கிரஸ் நேற்று பிரச்சினை கிளப்பியது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவை நடவடிக்கைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பும் கருப்பு உடையுடன் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் இன்றும் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் கருப்பு உடையுடன் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் பேப்பர்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினார்கள்.

    மற்றொரு காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.பிரதாபன் சபாநாயகர் இருக்கையை நோக்கி கருப்பு துணியை வீசினார். அப்போது சபை காவலர்கள் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரம் ஆகிய பிரச்சினைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    மேல் சபையில் இதே விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்தனர். சபை கூடியதுமே அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

    இதனால் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதைதொடர்ந்து அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 11வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

    Next Story
    ×