search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவன்- சமஸ்கிருத ஆசிரியராக விரும்புவதாக பேட்டி
    X

    சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவன்- சமஸ்கிருத ஆசிரியராக விரும்புவதாக பேட்டி

    • 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
    • சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை சமஸ்கிருத பாடத்தேர்வுகள் நடந்தது. பிளஸ்-2 தகுதி நிலையில் உள்ள இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

    இதில் உத்தரபிர தேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள சண்டலி பகுதியை சேர்ந்த சலாலுதீன் என்பவரின் மகன் இர்பான் 82.71 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 13 ஆயிரத்து 738 மாணவர்கள் தேர்வு எழுதியதில் இர்பான் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    இதனை இர்பானின் தந்தை சலாலூதின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த தங்களின் மகனுக்கு சமஸ்கிருதம் படிக்க ஆசை வந்தது. அதுபற்றி மகன் என்னிடம் கூறியபோது, நான் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    அவர் விரும்பும் படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதித்தேன். அவரும் சமஸ்கிருதத்தை ஆர்வத்துடன் படித்தார். இதனால் இன்று அவர் அந்த தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்துக்கள் மட்டுமே சமஸ்கிருதம் படிக்க வேண்டும், முஸ்லிம்கள் இதனை படிக்ககூடாது என்று நாங்கள் கருதவில்லை. எனவே தான் எங்கள் மகனின் விருப்பத்துக்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை.

    எதிர்காலத்தில் அவர் சமஸ்கிருத இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது ஆர்வத்துக்கு நான் ஒரு போதும் குறுக்கே நிற்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சமஸ்கிருத தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 20 பேரில் இர்பான் மட்டுமே முஸ்லிம் மாணவர் ஆவார். இதற்காக அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    இந்த சாதனையை படைத்த இர்பான் கூறும்போது, எதிர்காலத்தில் சமஸ்கிருத ஆசிரியராக விரும்புகிறேன். சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியங்களை கற்று கொடுக்கும் பணி செய்ய ஆர்வமாக உள்ளேன், என்றார்.

    Next Story
    ×