search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தியில் இன்றும் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்: 2 நாளில் 9 லட்சம் பேர் ராமரை வழிபட்டனர்
    X

    அயோத்தியில் இன்றும் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்: 2 நாளில் 9 லட்சம் பேர் ராமரை வழிபட்டனர்

    • இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.
    • அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மிக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சுமார் 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ராமர் சிலை சிரித்த முகத்துடன் கண்கவரும் வகையில் இருப்பதால் வடமாநில மக்களிடம் அவரை உடனடியாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தங்கி இருந்தனர். இதனால் முதல் நாளிலேயே சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்தனர். நேற்றும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் ராமரை கண்டு வழிபட்டனர்.

    கடந்த 2 நாட்களில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் பாலராமரை வழிபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக சிறப்பு ஆரத்தியுடன் அயோத்தி ராமர் ஆலயம் திறக்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.

    இன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை வழிபட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆலயங்கள் வரிசையில் ராமர் ஆலயம் முதன்மை இடத்துக்கு வந்துள்ளது.

    அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் 4 சக்கர வாகனங்களில் வருவது அதிகரித்து உள்ளது.

    அந்த வாகனங்கள் அனைத்தும் அயோத்தியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து பக்தர்கள் நடந்தே சென்று ராமரை தரிசிக்கிறார்கள். கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே ராமர் ஆலயத்துக்கு வருவது ஆலய நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் தேவையான குடிநீர், உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலுக்கு கடந்த 2 தினங்களாக காணிக்கையும் குவிந்து வருகிறது. முதல் நாளில் இணைய தளம் வழியாக ரூ.3.17 கோடி காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் காணிக்கையை நேரடியாக செலுத்துவதற்காக அயோத்தி ஆலய வளாகத்தில் 10 இடங்களில் காணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    அயோத்தி ராமருக்கு தினமும் 5 ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் 2 ஆரத்தி, மதியம் ஒரு ஆரத்தி, மாலை 2 ஆரத்தி என 5 ஆரத்தி நடக்கிறது. இதை பார்க்கவே அதிக பக்தர்கள் திரள்கிறார்கள்.

    ராமருக்கு தினமும் ஆகம விதிகளின்படி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடைகளின் வண்ணங்கள், நகைகள் ஆகியவையும் பாரம்பரிய முறைப்படி அணிவிக்கப்படுகிறது.

    வாரத்தில் 7 நாட்களும் கிழமைக்கு ஏற்ப ராமருக்கு உடை அணிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ராமருக்கு மெரூன் கலரில் பட்டாடை அணிவிக்கப்பட்டது. நேற்று பச்சை நிறத்திலும், இன்று மஞ்சள் நிறத்திலும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டன.

    ராமருக்கு ஏற்கனவே நாடு முழுவதும் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் வந்து குவிந்துள்ளன. தொடர்ந்து பரிசு பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மும்பையில் இருந்து ஒருவர் 7 அடி உயரமுள்ள வாள் ஒன்று பரிசாக வழங்கினார்.

    அந்த வாள் 80 கிலோ எடை கொண்டது. தங்க முலாம் பூசப்பட்ட அந்த வாள் ராமர் பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×