என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கரில் பிரதமர் மோடி இன்று முதல் 6 நாட்கள் தீவிர பிரசாரம்
    X

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கரில் பிரதமர் மோடி இன்று முதல் 6 நாட்கள் தீவிர பிரசாரம்

    • 5 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
    • வருகிற 5-ந்தேதி மீண்டும் பிரியங்கா மத்திய பிரதேசம் செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா உள்ளது.

    ஆனால் எப்போதும் இல்லாத வகையில் பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு அணியில் இணைந்துள்ளது. இதனால் இம்முறை பாராளுமன்ற தேர்தல் பலத்த போட்டியை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தேர்தல் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    5 மாநில தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா இப்போதே தயாராகி விட்டது. அடுத்த வாரம் தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் அதற்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் 76 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

    5 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் 5 மாநிலங்களுக்கும் ஏற்கனவே பல தடவை சென்று வந்து விட்டார்.

    இன்று (30-ந் தேதி) முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் பிரதமர் மோடி மீண்டும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இன்று (சனிக்கிழமை) அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இன்று பிற்பகல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதற்கு பிறகு பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா மாநிலத்தில் நாளையும் (1-ந்தேதி ), 3-ந் தேதியும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் மெகபூபா மாவட்டத்தில் ரூ.13,545 கோடி மதிப்பிலான திட்டங்களையும், நிஜாமாபாத் மாவட்டத்தில் ரூ.8,021 கோடியிலான திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்து பொதுக்கூட்டங்களிலும் பேச இருக்கிறார். 2-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்பர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், அதேநாளில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். 6-ந் தேதி மீண்டும் அவர் மத்திய பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    6 நாட்களில் அவர் 4 மாநிலங்களிலும் 8 தேர்தல் பிரசார பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    4 மாநிலங்களிலும் பல்வேறு அரசு திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

    மத்திய பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் அதன் பிறகு அம்மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது.

    இதையடுத்து அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி மலர்ந்தது. தற்போது வரை அங்கு பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்த தேர்தலிலும் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா போராடி வருகிறது.

    அதே சமயத்தில் இடையில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றி விட வேண்டும் என்ற தணியாத வேட்கையில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது.

    இம்மாநிலத்தில் ஏற்கனவே பிரியங்கா கடந்த ஜூன் மாதம் 2 தடவை சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை தொடர்ந்து இன்று ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அவர் சாஜபூர் மாவட்டத்தில் நடக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் ராகுலும், பிரியங்காவும் தீவிரமாக உள்ளனர்.

    எனவே


    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை அம்மாநிலம் உருவானதில் இருந்து தொடர்ந்து 2 முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்று அக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். வருகிற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் காயை நகர்த்தி வருகின்றன. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா வளர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால் 75 தொகுதிகளை இலக்காக கொண்டு பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஏற்கனவே பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு 5 மாநிலங்களிலும் தற்போது நடந்து வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான 900 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் பெரும்பாலான திட்டப்பணிகள் சாலை மற்றும் ரெயில்வே திட்டங்கள் ஆகும். இதன் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்து 5 மாநிலங்களிலும் வெற்றிக்கனியை பறிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டு உள்ளது.

    இதனால் இப்போது இருந்தே 5 மாநிலங்களிலும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுள்ளது.

    Next Story
    ×