என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி கட்டிட இடிபாட்டில் 36 மணிநேரத்துக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு: தக்காளி சாப்பிட்டு பசியை தீர்த்த அவலம்
    X

    டெல்லி கட்டிட இடிபாட்டில் 36 மணிநேரத்துக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு: தக்காளி சாப்பிட்டு பசியை தீர்த்த அவலம்

    • கட்டிட இடிபாடுகளில் மொத்தம் 21 பேர் சிக்கியிருந்தனர்.
    • 5 பேர் இறந்தனர் மற்றும் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி புராரி பகுதியில் கவுசிக் என்கிளேவ் பகுதியில் 200 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் கடந்த திங்கட்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.

    கட்டிடம் இடிந்துவிழுந்த சத்தம் கேட்டு அங்கிருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் இறந்தனர். உடனடியாக 12 பேர் மீட்கப்பட்டனர்.

    இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் 36 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ராஜேஷ் (வயது 30), அவரது மனைவி கங்கோத்ரி(26), அவர்களது குழந்தைகள் இளவரசன் (6), ரித்திக் (3) ஆகிய 4 பேரும் கட்டிட இடிபாடுக்குள் சிக்கியிருந்தனர்.

    கியாஸ் சிலிண்டர் மீது ஒரு சன்னல் விழுந்ததில் இடைவெளி இருந்தது. அந்த பகுதியில் 4 பேரும் சிக்கி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேடுதல் வேட்டையின் போது இவர்கள் 4 பேரும் கட்டிடத்தின் அடியில் சிக்கியிருந்ததை பார்த்த மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

    36 மணி நேரத்திற்கு 3 தக்காளி பழங்களை மட்டுமே சாப்பிட்டு பசியை போக்கியுள்ளனர்.

    நான் எனது குடும்பத்திற்கு இரவு உணவு தயாரிக்கும் முன் மாலை 6.30 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. எங்கள் மேலே விழுந்த கட்டிட துகள்களை அகற்ற நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை இதனால் நான் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன்.

    இந்த 36 மணி நேரத்தில் வீட்டில் வைத்திருந்ததில் சிதறி கிடந்த 3 தக்காளி பழங்களை மட்டுமே சாப்பிட்டேன். அந்த தக்காளியே எங்கள் பசியை தீர்த்தது.

    கடவுளின் கருணையால் நாங்கள் 4 பேரும் காப்பாற்ற பட்டுள்ளோம். கடவுளுக்கு நன்றி என்றார்.

    மீட்கப்பட்ட அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் மொத்தம் 21 பேர் சிக்கியிருந்தனர். அதில் 5 பேர் இறந்தனர் மற்றும் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×