என் மலர்
இந்தியா

21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு: பிரதமர் மோடி பெருமிதம்
- ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மலேசியாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது. அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆசியான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு வாழ்த்துகள். இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ள திமோர் நாட்டை வரவேற்கிறேன்.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளில் தான் வசிக்கின்றனர். நாம் வர்த்தக உறவை மட்டும் பகிரவில்லை. கலாசார உறவுகளையும் பகிர்கிறோம்.
இந்தியாவின் தெற்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் அமைப்பு முக்கிய தூணாக திகழ்கிறது. சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக நமது வலுவான கூட்டாண்மை உருவாகி வருகிறது.
இந்தியா எப்போதும் ஆசியான் கூட்டாளிகளுடன் துணை நின்று வருகிறது. மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணி, கடலோர பாதுகாப்பு மற்றும் கடல், கடல்சார் வளங்கள் அடிப்படையிலான பொருளாதாரம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.
2026 ம் ஆண்டை ஆசியான் - இந்தியா கடலோர பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஆண்டு என அறிவித்துள்ளோம்.
கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுவாக ஊக்குவித்து வருகிறோம்.
21-ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு. ஆசியான் அமைப்பின் சமூக தொலைநோக்கு கொள்கை 2045 மற்றும் வளர்ந்த பாரதம் 2047 ஆகியவற்றின் நோக்கம், முழு மனித குலத்துக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குமென நம்புகிறேன் என தெரிவித்தார்.






