search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக
    X
    பாஜக

    உத்தரகாண்ட் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பு: பா.ஜ.க. தலைவர்கள் தீவிர ஆலோசனை

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றிக்கு புஷ்கர் சிங் தாமியின் பங்கும் கணிசமாக இருப்பதாக பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

    தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் 4 மாநிலங்களில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. கோவாவில் பிரமோத் சாவந்த் மற்றும் மணிப்பூரில் பைரன்சிங் ஆகியோர் முதல்-மந்திரியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆனால் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, காமியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

    இது பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா? என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது.

    அடுத்து முதல்-மந்திரி பதவியை அலங்கரிக்கப் போவது யார்? என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மத்திய மந்திரி அஜய்பட் மற்றும் ரிதுகந்தூரி ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

    அதே சமயம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றிக்கு புஷ்கர் சிங் தாமியின் பங்கும் கணிசமாக இருப்பதாக பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. இதனால் மீண்டும் அவரே முதல்-மந்திரி ஆவார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

    ஆனாலும் முதல்-மந்திரி தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

    4 மாநிலங்களிலும் முதல்-மந்திரியாக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கடந்த சில நாட்களாக விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதில் முதல்-மந்திரிகளாக யாரை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்-மந்திரி தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனாலும் இதில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

    இன்னும் ஓரிரு நாட்களில் உத்தரகாண்ட் உள்பட 4 மாநிலங்களில் நடைபெறும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பிறகு பதவி ஏற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×