search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புஷ்பா கனேடிவாலா
    X
    புஷ்பா கனேடிவாலா

    பாலியல் வழக்குகளில் சர்ச்சை தீர்ப்புகள் கூறிய மும்பை ஐகோர்ட்டு பெண் நீதிபதி திடீர் ராஜினாமா

    பாலியல் வழக்குகளில் சர்ச்சை தீர்ப்புகளை கூறி விமா்சனத்திற்குள்ளான மும்பை ஐகோர்ட்டு பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா திடீரென ராஜினாமா செய்து உள்ளார்.
    மும்பை:

    மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் புஷ்பா கனேடிவாலா. இவர் மும்பை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட இருந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவாி மாதம் பாலியல் வழக்கு ஒன்றில், ஆடை மேல் பெண்ணை தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என தீர்ப்பு கூறினார். பெண் நீதிபதியின் இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது.

    இதேபோல போக்சோ வழக்கு ஒன்றில், குற்றவாளி சிறுமியின் கையை பிடித்து கொண்டு, பேன்ட் ஜிப்பை திறந்தது பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்றார். பெண் நீதிபதியின் இந்த தீர்ப்புகள் சர்ச்சையானது.

    பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க செய்யப்பட்ட பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் ரத்து செய்தது. இதுதவிர அவர் மேலும் ஒரு ஆண்டுக்கு மட்டும் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அவரது பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் தொடர்ந்து கூடுதல் நீதிபதியாக பணியாற்ற பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதேபோல நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்படவில்லை. இதனால் அவர் மீண்டும் மாவட்ட நீதிமன்றம் அல்லது செசன்ஸ் கோர்ட்டுகளில் நீதிபதியாக வேண்டிய நிலை இருந்தது.

    இந்தநிலையில் அவர் தனது பணியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பணி ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக அவர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×