search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்த நவீன யுகத்திலும் மாட்டை பூட்டி செக்கிழுக்கும் காஷ்மீர் முதியவர்
    X
    இந்த நவீன யுகத்திலும் மாட்டை பூட்டி செக்கிழுக்கும் காஷ்மீர் முதியவர்

    இந்த நவீன யுகத்திலும் மாட்டை பூட்டி செக்கிழுக்கும் காஷ்மீர் முதியவர்

    காஷ்மீரில் கடந்த 1970-களில் மூலை முடுக்கெல்லாம் மரச்செக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது இந்த பாரம்பரிய செக்கை பயன்படுத்த யாரும் இல்லை.
    ஸ்ரீநகர் :

    எண்ணெய் வித்துகளில் இருந்து சமையல் எண்ணெய் எடுப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மரச்செக்கு பயன்படுத்தப்பட்டது. இதை இழுப்பதற்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன.

    தற்போது விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்தில் இந்த மரச்செக்கு பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. பெரும்பாலும் காட்சிப்பொருளாகவே மாறிவிட்ட மரச்செக்கு, ஆங்காங்கே ஓரிரு பகுதிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

    இதில் முக்கியமாக, காஷ்மீரை சேர்ந்த முகமது வானி (வயது 77) என்ற முதியவர் இன்றும் மரச்செக்கு மூலம் எண்ணெயை பிரித்தெடுத்து வருவது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    இந்த தள்ளாத வயதிலும் அதிகாலை முதல் அந்தி மாலை வரை செக்கில் மாட்டை ஓட்டி எண்ணெய் எடுத்து வரும் அவருக்கு என பல வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    காஷ்மீரில் கடந்த 1970-களில் மூலை முடுக்கெல்லாம் மரச்செக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது இந்த பாரம்பரிய செக்கை பயன்படுத்த யாரும் இல்லை.

    அந்தவகையில் இந்த பாரம்பரிய செக்கை பயன்படுத்தும் கடைசி நபராக வானி இருக்கலாம் என காஷ்மீரிகள் கூறியுள்ளனர்.

    அனைத்து தொழிலையும் நாகரிகம் தொற்றிக்கொண்டபோதும், தான் மட்டும் இன்றும் பாரம்பரிய முறையிலேயே தொடர்வது வானிக்கு எந்த குறையாகவும் தெரியவில்லை. நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்தாலும் அதிகபட்சமாக ரூ.200 வரைதான் சம்பாதித்தபோதும், வாழ்நாள் முழுவதும் இதையே தொடர முடிவு செய்துள்ளார்.

    ஸ்ரீநகருக்கு தெற்கே பாம்போரில் இந்த மரச்செக்கை நடத்தி வரும் வானி, இது குறித்து கூறுகையில், ‘இங்கு ஏராளமான மரச்செக்குகள் இருந்தன. ஆனால் இன்று பலரும் இந்த பாரம்பரிய முறையை கைவிட்டுவிட்டனர். இந்த தொழில் சீக்கிரமே அழிந்து விடும். ஏனெனில் நான் மட்டும்தான் தற்போது இந்த மரச்செக்கு தொழிலை செய்து வருகிறேன்’ என்று வருத்தத்துடன் கூறினார்.

    இந்த தொழிலில் குறைவான வருமானம் கிடைத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத வானிக்கு, பல பகுதிகளில் இருந்தும் தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களை நீண்ட நேரம் காக்க வைக்க வேண்டியிருக்கிறதே என்ற ஒரேயொரு குறை மட்டுமே இருக்கிறது.
    Next Story
    ×