search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாதுதீன் ஒவைசி
    X
    அசாதுதீன் ஒவைசி

    இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்த அசாதுதீன் ஒவைசி

    என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது ஏன் உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை? என ஒவைசி கேள்வி எழுப்பினார்.
    புதுடெல்லி:

    ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பியபோது அவரது கார் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இந்த தாக்குதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலையடுத்து ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் இருவருக்கும் அவர்களது வீட்டிலும், அவர்கள் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பார்கள்.

    இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று பேசிய ஒவைசி, தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்தார். குற்றவாளிகள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார்.

    ஒவைசியின் காரில் புல்லட் துளைத்த பகுதி

    ‘எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம். உங்கள் அனைவருக்கும் இணையாக நான் ஏ பிரிவு குடிமகனாகவே இருக்க விரும்புகிறேன். என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது ஏன் உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை? ஏழைகள் பாதுகாப்பாக இருக்கும்போது நானும் பாதுகாப்பாக இருப்பேன். எனது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர்களுக்கு நான் பயப்பட மாட்டேன்’ என்றார் ஒவைசி.

    என்மீது சுடப்பட்ட தோட்டாக்களுக்கு வாக்குச்சீட்டின் மூலம் உத்தர பிரதேச மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தான் உறுதியாக நம்புகிறேன் என்றும் ஒவைசி கூறினார்.

    Next Story
    ×