search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆதார் கார்டு - வாக்காளர் அடையாள அட்டை
    X
    ஆதார் கார்டு - வாக்காளர் அடையாள அட்டை

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு- மக்களவையில் இன்று மசோதா அறிமுகம்

    வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதற்கு வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அவலம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக ஒரே நபர் சொந்த ஊரிலும், தற்போது வசிக்கிற ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.

    இதை முடிவுக்கு கொண்டு வர வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம் பெற முடியாத நிலை வந்து விடும்.

    இதற்கான தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வழிவகை செய்யும்.

    இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று (திங்கட்கிழமை) அறிமுகம் செய்வார். அதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட மாட்டாது. ஒரு தனி நபரால் தனது ஆதார் எண்ணை தெரிவிக்க இயலாமையால், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவு நீக்கப்படமாட்டாது எனவும் மசோதா கூறுகிறது. ஆதாருக்கு பதிலாக வேறு மாற்று ஆவணத்தை வழங்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இது தொடர்பான மசோதா, மக்களவை உறுப்பினர்களுக்கு சுழற்சியில் விடப்பட்டுள்ளது

    மக்களவை உறுப்பினர்களுக்கு சுழற்சியில் விடப்பட்டுள்ள மசோதாபடி, 1950 மற்றும் 1951-ம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் திருத்தப்பட உள்ளன.

    மசோதாவின் பொருள் மற்றும் காரணங்களின் அறிக்கை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 23, வாக்காளர் பட்டியல் தரவை ஆதாருடன் இணைப்பதற்காக திருத்தப்படும் என்று கூறுகிறது. இதனால் ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் வாக்காளர்களாக பல முறை சேருவது தடுக்கப்படும்.

    தற்போது வாக்காளராக ஒருவர் பதிவு செய்வதற்கு ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது விதி. இனி ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய 4 தேதிகள், வாக்காளர் பட்டியலை தயாரிப்பது அல்லது திருத்துவது தொடர்பான தகுதி தேதிகளாக இருக்கும்.

    இதனால் ஒருவர் 4 தகுதி பெறும் தேதிகளில் ஒன்றில் 18 வயது முடிந்தாலும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வழி பிறக்கும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 14 திருத்தப்பட உள்ளது.
    Next Story
    ×