search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் சேதமடைந்த மலைப்பாதை சீரமைக்கும் பணி தீவிரம்
    X
    திருப்பதியில் சேதமடைந்த மலைப்பாதை சீரமைக்கும் பணி தீவிரம்

    திருப்பதியில் சேதமடைந்த மலைப்பாதை சீரமைக்கும் பணி தீவிரம்: 30-ந்தேதிக்குள் வாகனங்கள் இயக்க ஏற்பாடு

    பேரிடர் காலங்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல 3-வது பாதை அமைக்க வேண்டும் என தேவஸ்தானத்திற்கு நிபுணர் குழுவினர் அறிவுறுத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த காலநிலை காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. சாலைகள் பாலங்கள் சேதமடைந்தன.

    திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் மலைபாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் திருமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அலிபிரியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் திருமலையில் இருந்து திருப்பதி வரும் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில் சேதமடைந்த மலைப்பாதையில் டெல்லி சென்னையை சேர்ந்த நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். பேரிடர் காலங்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல 3-வது பாதை அமைக்க வேண்டும் என தேவஸ்தானத்திற்கு நிபுணர் குழுவினர் அறிவுறுத்தினர்.

    கேரளாவை சேர்ந்த அமிர்தா பல்கலைக்கழகம் நிபுணர் கோவிந்தம் சாலையை பார்வையிட்டு நவீன முறையில் சாலையில் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேதமடைந்த மலைப்பாதை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் திருமலையிலிருந்து வாகனங்கள் கீழே வரும் இணைப்புச் சாலை வழியாக சென்று மீண்டும் திருமலைக்கு செல்லும் சாலையில் சென்று வருகின்றன.

    இதனால் மலையில் இருந்து கீழே வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கீழே இருந்து செல்லும் வாகனங்கள் இணைப்பு சாலை வழியாகச் சென்ற பின்னர் மேலே இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    வருகிற 30-ந்தேதிக்குள் பணிகள் முடிவடைந்து வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதை சீரமைக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    திருப்பதியில் நேற்று 30,668 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,570 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 

    Next Story
    ×