search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    பாராளுமன்றத்தை நோக்கிய டிராக்டர் பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்

    விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பிரதமருக்கு விவசாயிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கான நடைமுறை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடங்கும் என கூறினார். ஆனால் விவசாயிகளோ வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி, போராட்டக் களங்களிலேயே முகாமிட்டுள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளான நவம்பர் 29ம் தேதி பாராளுமன்றத்தை நோக்கி, 60 டிராக்டர்கள், 1000 விவசாயிகள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (நவம்பர் 29) விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    இதையடுத்து விவசாயிகள் பாராளுமன்றத்தை நோக்கி நடத்தவிருந்த பேரணியை ஒத்திவைத்துள்ளனர். வரும் 29ஆம் தேதி பாராளுமன்றத்தில் சட்டங்கள் நீக்கப்படும் என்று அரசாங்கம் உறுதி அளித்திருப்பதால், பாராளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்திருப்பதாக விவசாய சங்க தலைவர் தர்ஷன் பால் தெரிவித்தார்.

    ‘எங்களின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் அளிக்க வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வேளாண் கழிவுகள் எரிப்பு வழக்குகள் மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அரசின் பதிலுக்காக டிசம்பர் 4ம் தேதிவரை காத்திருப்போம். அதன்பின்னர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து அறிவிப்போம்’ என்றும் தர்ஷன் பால் கூறினார்.

    Next Story
    ×