search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி அரசின் இலவச யாத்திரை திட்ட பட்டியலில் வேளாங்கண்ணி - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

    டெல்லியின் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டத்தின் கீழ், ஸ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்ய 1000 யாத்ரீகர்கள் அயோத்திக்கு அனுப்பப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 'முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா' என்கிற இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அன்று டெல்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.

    கொரோனா தொற்று காரணமாக யாத்திரை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

    'முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ், பூரி, ராமேஸ்வரம், ஷீரடி, மதுரா, ஹரித்வார் மற்றும் திருப்பதி உட்பட 13 தலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் மூத்த குடிமக்களின் புனித யாத்திரையின் முழுச் செலவையும் டெல்லி அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்ட புனித யாத்திரை பட்டியலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியை சேர்க்க கடந்த மாதம் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
     
    அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் வயதான 1,000 யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் முதல் ரயில் டிசம்பர் 3-ம் தேதி அயோத்திக்கு புறப்படும் என்று டெல்லி அரசின் தீர்த்த யாத்திரை விகாஸ் சமிதியின் தலைவர் கமல் பன்சால் தெரிவித்தார்.

    இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டத்தில் தமிழகம், நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தை  புனித யாத்திரைத் தலங்களின் பட்டியலில் சேர்த்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    டெல்லியின் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டத்தின் கீழ், ஸ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்ய அவர்களை அயோத்திக்கு அனுப்புகிறோம். அயோத்திக்கு முதல் ரயில் டிசம்பர் 3-ம் தேதி புறப்படும். முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
     
    கிறிஸ்தவ மக்களின் கோரிக்கையை ஏற்று, இலவச யாத்திரைத் திட்டத்தின் கீழ் உள்ள புனித யாத்திரை தலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தையும் சேர்த்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்?
    Next Story
    ×