search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேர்தல் ஆணையம்
    X
    இந்திய தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல்

    கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததால் காலியான 2 எம்.பி. இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி பாராளுமன்ற மேல்சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இவர்களில் 233 பேர் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் எம்.எல்.ஏ.க்களால் ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படுவார்கள். 12 பேரை மத்திய அரசே நேரடியாக நியமனம் செய்யும்.

    233 பேரில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இத்தனை எம்.பி.க்கள் என்று மக்கள்தொகையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு 18 எம்.பி. பதவிகள் உள்ளன. இவற்றில் 3 இடங்கள் காலியாக இருந்தன. அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான் மரணமடைந்ததால் அந்த இடம் காலியாக இருந்தது.

    அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி.யாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இதனால் இருவருமே தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். எனவே அந்த இடங்களும் காலியாகின.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 இடங்கள் காலியாக இருந்தன. இதில் முகமது ஜான் இறந்ததால் காலியான தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் பார்க்கும்போது தி.மு.க.வே வெற்றி பெறும் நிலையே இருந்தது.

    தி.மு.க. வேட்பாளராக முகமது அப்துல்லா அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததால் காலியான 2 எம்.பி. இடங்களுக்கும் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.

    இதன்படி அக்டோபர் 4-ந் தேதி 2 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 15-ந் தேதி இதற்கான மனுதாக்கல் தொடங்கும். 22-ந் தேதி மனுக்களை தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். 23-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 27-ந் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். போட்டி இருந்தால் அக்டோபர் மாதம் 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை தேர்தல் நடைபெறும். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட வேண்டும்.

    4-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு முடிவு வெளியிடப்படும்.

    எம்.பி. பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் வருகிற 29.6.2022 வரை இருந்தது. எனவே அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்படுபவர் 8 மாத காலம் மட்டுமே பதவியில் இருக்க முடியும்.

    கேபி முனுசாமி

    கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2.4.2026 வரை இருந்தது. எனவே அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர் 4 ஆண்டுகள், 2 மாதம் பதவியில் இருக்க முடியும்.

    தற்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அந்த கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கும். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை அறிவிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    தமிழ்நாடு போல் அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரத்தில் காலியாக உள்ள 3 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.


    Next Story
    ×