என் மலர்

    செய்திகள்

    காயமடைந்த பாஜக தொண்டரிடம் நலம் விசாரிக்கும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
    X
    காயமடைந்த பாஜக தொண்டரிடம் நலம் விசாரிக்கும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

    பாஜக பிரசார கூட்டத்தில் தாக்குதல்... பாதுகாப்பை அதிகரிக்க சொல்லும் மத்திய மந்திரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஏற்பட்ட மோதலில் பாஜக இளைஞரணி தொண்டர் பலத்த காயமடைந்ததாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாக முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இரு தரப்பினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 

    மம்தா பானர்ஜி கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரம் தொடங்கியபோது, அவரது கால் கார் கதவில் சிக்கி நசுங்கியது. கூட்டத்தில் இருந்த சிலர் வேண்டுமென்றே தன்னை தள்ளிவிட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இது பாஜகவின் சதி என்றும் மம்தா குற்றம்சாட்டினார். சிகிச்சைக்கு பிறகு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரசாரத்தை தொடர்கிறார் மம்தா.

    இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், வேட்பாளர் சுவேந்து அதிகாரி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக புகார் கூறி உள்ளது. அத்துடன், தேர்தலுக்கு முன்பாக பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுபற்றி மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் பாதயாத்திரை இன்று தொடங்கியபிறகு, என் கண் முன்னால் இளைஞரணி தொண்டர் தாக்கப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது அவர் தாக்கப்பட்டார். அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. நான்தான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். 

    தேர்தல் ஆணையம் இங்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். துணை ராணுவப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும்.

    மம்தா பானர்ஜி ஜனநாயக வழியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். எங்களுக்கு புரியவில்லை... இதையெல்லாம் அவர் செய்யக்கூடாது. அவர்கள் நந்திகிராமைச் சேர்ந்தவர்கள். திரிணாமுல் காங்கிரசின் வன்முறையால் 130 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று குற்றம்சாட்டினார்.

    மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நந்திகிராமில் ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் (2ம் கட்ட தேர்தல்) நடைபெறுகிறது. 
    Next Story
    ×