search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் தொண்டர் மீது தாக்குதல்
    X
    பெண் தொண்டர் மீது தாக்குதல்

    கற்பழிப்பு குற்றவாளிக்கு சீட் கொடுப்பதா?- எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் பெண் தொண்டர் மீது சரமாரி தாக்குதல்

    உத்தர பிரதேச மாநிலம் தியோரியாவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டர் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தியோரியா:

    உத்தர பிரதேச  மாநிலம் தியோரியா சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேற்று காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது முகுந்த் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு தாரா தேவி யாதவ் என்ற பெண் தொண்டர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

    இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தாரா தேவிக்கு எதிராக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாரா தேவியை சூழ்ந்துகொண்டு சிலர் தாக்கினர். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    ‘நமது தலைவர்கள் ஒரு பக்கம் ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு போராடுகிறார்கள், மறுபக்கம் கற்பழிப்பு குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிறார்கள். இது தவறான முடிவாகும். இது கட்சியின் இமேஜை கெடுத்துவிடும்’ என தாரா தேவி கூறினார்.

    மாவட்ட தலைவர் தர்மேந்திர சிங், துணைத் தலைவர் அஜய் சிங் மற்றும் இரண்டு நபர்கள் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் தாரா தேவி புகார் அளித்துள்ளார்.

    தாரா தேவியை தாக்கியது தொடர்பாக 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×