search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    கற்பழிப்பு வழக்குகளில் 2 மாதத்தில் போலீஸ் விசாரணை முடிய வேண்டும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு

    கற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களில் போலீஸ் விசாரணை முடிய வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராசில் தாழ்த்தப்பட்ட இன இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.

    இந்த தருணத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.

    இதன் முக்கிய சாராம்சங்கள் வருமாறு:-

    * குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி, வாரண்டு இன்றி கைது செய்யப்படும் குற்றங்களில் கட்டாயம் வழக்கு பதிவு செய்தல் வேண்டும். போலீஸ் துறை விதிகளை பின்பற்ற தவறினால், நீதி வழங்குவதற்கு ஏற்றதாக இராது.

    * ஒரு போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்கு வெளியே பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு உள்ளிட்ட குற்றம் நடந்து, அதுபற்றிய தகவல் கிடைத்தால் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் வழி உள்ளது.

    * சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தாலும்கூட, போலீஸ் துறை பின்பற்ற தவறினால், நாட்டில் குற்றவியல் வழக்குகளில் நீதி வழங்குவது ஏற்றதாக இருக்காது. அப்படிப் பட்ட சூழல் தெரியவந்தால், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு பொறுப்பான குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    * கற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களில் போலீஸ் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 173 கூறுகிறது. அதே சட்டத்தின் பிரிவு 164-ஏ, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் தாக்குதல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்துடன், அவரை 24 மணி நேரத்துக்குள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது பின்பற்றப்படவேண்டும்.

    * எழுத்தாலோ, வாய்மொழியாலோ வாக்குமூலம் அளித்த நபர் இறந்து விட்டால், அவரது வாக்குமூலம் உண்மையாக கருதப்படும் என்று இந்திய சாட்சிய சட்டம், 1872 கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், மரண வாக்குமூலம் அளிக்கப்படுகிறபோது, நீதித்துறை ஆய்வின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்கிறபோது, அதை ஒரு மாஜிஸ்திரேட்டு பதிவு செய்யவில்லை என்பதாலோ அல்லது அத்தகைய வாக்குமூலத்துக்கு அப்போது அங்கிருந்த நபரிடம் சான்றொப்பத்தை போலீஸ் அதிகாரி பெறவில்லை என்பதாலோ அதை நிராகரிக்க முடியாது என கூறி உள்ளது.

    * பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சான்று சேகரிப்பு கருவிகளை (எஸ்.ஏ.இ.சி.) பயன்படுத்துவது அவசியம்.

    * பாலியல் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களை அடையாளம் காணவும், கண்காணிக்கவும் தேசிய தரவுதளத்தை பயன்படுத்த வேண்டும்.

    * பெண்கள், பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாள்வதற்கான சட்ட விதிகளை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி நடக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். குற்றப்பத்திரிகை உரிய நேரத்தில் தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×