search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தையை டாக்டர் சைலஜா கையில் வைத்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தையை டாக்டர் சைலஜா கையில் வைத்திருப்பதை படத்தில் காணலாம்.

    நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

    டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது நடுவானில் விமானத்தில் கர்ப்பிணி குழந்தையை பெற்றெடுத்தார்.
    பெங்களூரு:

    பொதுவாக ஓடும் பஸ், ரெயில், ஆட்டோ, ஆம்புலன்சுகளில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சொந்த வேலையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று இருந்தார். நேற்று முன்தினம் மாலை அந்த பெண் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்து கொண்டு இருந்தார். அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை மகப்பேறு டாக்டர் சைலஜாவிடம், பெண் பிரசவ வலியில் அலறி துடிப்பது குறித்து விமான பணிப்பெண்களான அனுபிரியா, திருப்தி, அங்கிகா ஆகியோர் கூறினர். இதையடுத்து பெண்ணுக்கு பிரசவம் பார்க்க சைலஜா முடிவு செய்தார்.

    இதையடுத்து விமானத்திற்குள் ஒரு தனி அறையை போல விமான பணிப்பெண்கள் அமைத்து கொடுத்தனர். அதில் வைத்து பெண்ணுக்கு, டாக்டர் சைலஜா பிரசவம் பார்த்தார். அவருக்கு விமான பணிப்பெண்கள் உதவியாக இருந்தனர். இதையடுத்து பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் டாக்டரும், விமான பணிப்பெண்களும், பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    மேலும் பெங்களூருவில் உள்ள விமான நிலைய அதிகாரிகளை, விமான பணிப்பெண்கள் தொடர்பு கொண்டு குழந்தை பிறந்தது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்சில் பெண்ணும், குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டரையும், அவருக்கு உதவிய விமான பணிப்பெண்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
    Next Story
    ×