search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி விமான நிலையம்
    X
    டெல்லி விமான நிலையம்

    டெல்லி விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

    டெல்லி விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வசதி நேற்று தொடங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

    இந்த விமானங்களில் வரும் பயணிகள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலிலும், பின்னர் வீட்டுத்தனிமையில் 7 நாட்களும் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் பயணத்துக்கு 96 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து அதில் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றிதழுடன் வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    ஆனால் இந்த சான்றிதழ் இல்லாமல், இந்தியா வந்தபிறகு உள்நாட்டு விமானத்தை பிடிக்க வேண்டிய பயணிகள் முதலில் இறங்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதில் நெகட்டிவ் வந்தால் கட்டாய தனிமைப்படுத்தல் இன்றி குறித்த உள்நாட்டு விமானத்தில் அவர் பயணத்தை தொடர முடியும்.

    அதன்படி டெல்லி விமான நிலையத்தில் நேற்று முதல் இந்த பரிசோதனை வசதி (ஆர்.டி.பி.சி.ஆர்.) தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனைக்காக சளி மாதிரியை கொடுத்து விட்டு முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதற்காக விமான நிலைய ஓய்வறை அல்லது ஓட்டலை பயணிகள் தேர்வு செய்யலாம்.

    இந்த பரிசோதனை முடிவுகள் 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கிடைத்து விடும். இந்த பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓய்வறை வாடகை ரூ.2,600-ம் சேர்த்து மொத்தம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என விமான நிலையம் அறிவித்து உள்ளது.
    Next Story
    ×