search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்வானி
    X
    அத்வானி

    அயோத்தி பாபர் மசூதி இடிப்பு : அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கில் இம்மாத இறுதியில் தீர்ப்பு

    அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கில் விசாரணை முடிந்தது. இந்த மாத இறுதியில் தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி கரசேவகர்கள் இடித்து தள்ளினர்.

    இந்த மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவானது.

    இந்த வழக்கு விசாரணை, லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் குற்றப்பத்திரிகையில் 49 பேர் பெயர்கள் இடம்பெற்றன. ஆனால் அவர்களில் 17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது மட்டுமே விசாரணை நடைபெற்றது.

    இந்த வழக்கில் முதலில் ஏப்ரல் 18-ந் தேதிக்குள் விசாரணையை முடிக்குமாறு லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் அவகாசம் வழங்குமாறு தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் விசாரணையை முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரில் பெரும்பாலானவர்கள் காணொலி காட்சி வழியாகவும், மற்றவர்கள் நேரிலும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழ் வாக்குமூலம் அளித்தனர். அனைவரும் தாங்கள் அப்பாவிகள் என்றும், அரசியல் ரீதியான சதித்திட்டத்தால் இந்த வழக்கில் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க மேலும் அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், கடந்த மாதம் கோரிக்கை விடுத்தார்.

    அதை நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு பரிசீலித்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் (செப்டம்பர் 30-ந் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது.

    நேற்று முன்தினம் லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேர் தரப்பிலான வக்கீல்களில் சிலர் நேரிலும், மற்றவர்கள் காணொலி காட்சி வழியாகவும் ஆஜராகி, தங்கள் இறுதி வாதத்தை எடுத்து வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து விசாரணை முடிந்தது. சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்த மாதம் 30-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளதால், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்து விடும்.

    இதற்கிடையே, தீர்ப்புக்காக வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தன் முன் வைக்குமாறு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், கோர்ட்டு ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Next Story
    ×