search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாளவிகா
    X
    மாளவிகா

    கர்நாடகத்தில் அரசு கவிழ குமாரசாமி தான் காரணம் - நடிகை மாளவிகா

    கர்நாடகத்தில் அரசு கவிழ குமாரசாமி தான் காரணம் என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருக்கும் மாளவிகா கூறியுள்ளார்.

    சென்னை:

    கன்னட நடிகை மாளவிகா பாலசந்தர் இயக்கிய டி.வி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். ஜே.ஜே உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்.

    தற்போது கர்நாடக பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருக்கும் மாளவிகா அங்கு நிலவும் அரசியல் நிலவரம் குறித்து தனியார் இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    குமாரசாமி அரசு கவிழ பா.ஜனதா காரணமே இல்லை. அவருடைய ஈகோ தான் காரணம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை விட குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தது. மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்த குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

    இதை பற்றி இருவருமே பல நேரங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்குள் இருந்த ‘ஈகோ’ மற்றும் முரண்பாடு காரணமாகவே ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதற்கு பா.ஜனதாவை காரணம் கூறுவது ஏற்புடையது அல்ல. நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

    குமாரசாமி, சித்தராமையா ஆகிய இருவர் மீதும் அதிருப்தி அடைந்ததால் தான் 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்தார்கள். இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

    குமாரசாமி

    அப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? ராஜினாமா கடிதம் தந்த எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கு சித்தராமையா மீது அதிருப்தி இருந்தது, சிலருக்கு குமாரசாமி நடவடிக்கைகள் பிடிக்க வில்லை, சிலருக்கு காங்கிரஸ் தலைமை மீது கோபம் இருந்தது. இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காங்கிரஸ், ம.ஜனதா தளம் இடையே பல மாதங்களாக நிலவி வந்த கருத்துமோதல் ஒரு கட்டத்தில் வெடித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    கோவா மாநிலத்தில் நடந்ததை இதனுடன் ஒப்பிட வேண்டாம். அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியதா? உரிமை கோராமல் அசட்டையாக இருந்ததற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.

    நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். ஆதரவு திரட்டினோம். காங்கிரஸ் முயற்சியே செய்யாத போது அவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும். கோவாவையும் கர்நாடகாவையும் ஒப்பிடாதீர்கள்.

    கர்நாடகாவில் அடுத்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியை பா.ஜனதா நிறைவு செய்து விடுமா? என்று கேட்கிறீர்கள். தற்போதைய சூழலில் எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. முதலில் கவர்னர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கட்டும். அதற்குள் நிறைவு செய்வீர்களா, நீடிப்பார்கள் எனக்கேட்க வேண்டாம். ஆட்சி கவிழ்ந்த விவாகரத்தில் சபாநாயகர் பற்றி கருத்து கூற முடியாது.

    நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் சபாநாயகர் பேச்சுக்கு குமாரசாமி மதிப்பு தரவில்லை. கவர்னர் கடிதம் அனுப்பியிருந்தார். அதையும் அவர் மதிக்கவில்லை. இறுதியாக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் குமாரசாமியால் தான் ஏற்பட்டது. இதன் காரணமாக கூட அவர் விரக்தியில் இருக்கலாம்’.

    இவ்வாறு மாளவிகா பேட்டி அளித்துள்ளார்.

    Next Story
    ×