என் மலர்
செய்திகள்

5-வது கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்ந்தது
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்தது. ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த நிலையில் 5-வது கட்டத்துக்கான தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 5-வது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த 51 தொகுதிகளில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 51 தொகுதிகளிலும் கடந்த மாதம் 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 20-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 51 தொகுதிகளிலும் கடந்த இரு வாரங்களாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்பட பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இந்த 51 தொகுதிகளிலும் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியுடன் இந்த 51 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. நாளை (ஞாயிறு) பூத் சிலிப்கள் வினியோகிக்கும் பணி நடைபெறும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 4 கட்ட தேர்தல்களில் 373 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. நாளை மறு நாள் நடக்கும் 5-வது கட்ட ஓட்டுப்பதிவு தொகுதிகளையும் சேர்த்தால் 424 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு பெறுகிறது.
மே 12-ந்தேதி 59 தொகுதிகளில் 6-வது கட்ட தேர்தலும், மே 19-ந்தேதி 59 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தலும் நடைபெற வேண்டியுள்ளது. இந்த 118 தொகுதிகளும் பீகார், அரியானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களிலும் டெல்லி, சண்டிகர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் உள்ளன. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் தேர்தல் முடிந்து விட்டது. #Loksabhaelections2019






