search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவியின் ரூ. 5.83 கோடி வெளிநாட்டு சொத்து முடக்கம்
    X

    விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் - கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவியின் ரூ. 5.83 கோடி வெளிநாட்டு சொத்து முடக்கம்

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவிக்கு சொந்தமாக பாரிஸ் நகரில் உள்ள ரூ. 5.83 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டது. #VVIPChopper #ChristianMichel #Michelsexwife
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
     
    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்ததால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதைதொடர்ந்து, கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மூன்றுமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். தற்போது, அவர் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் சுமார் 225 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேற்கண்ட தொகையில் 5 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்து 422 ரூபாயை பாரிஸ் நகரில் தங்கியிருந்த தனது முன்னாள் மனைவி வலேரி என்பவரின் வங்கி கணக்குக்கு கிறிஸ்டியன் மைக்கேல் முன்னர் அனுப்பி இருந்தது இந்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    அந்தப் பணத்தை வைத்து பாரிஸ் நகரின் விக்டர் ஹுகோ பகுதியில் உள்ள 45-வது நிழற்சாலையில் வீட்டுடன் கூடிய ஒரு சொத்தினை கிறிஸ்டியன் மைக்கேலின் முன்னாள் மனைவி வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், மேற்படி சொத்தினை கையகப்படுத்த இந்தியாவை சேர்ந்த பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர். 

    கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் விரைவில் பிரான்ஸ் அரசின் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையின் மூலம் இந்த சொத்து முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VVIPChopper #ChristianMichel #Michelsexwife
    Next Story
    ×