search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது - கமல்ஹாசன் பேட்டி
    X

    கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது - கமல்ஹாசன் பேட்டி

    கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ParliamentElection
    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றார்.



    ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக சென்று இருந்த அவர் அந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்தார். சுமார் அரைமணி நேர சந்திப்பிற்கு பின் கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ‘மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதல் எங்களுக்கு ஆதரவு அளித்து வருபவர் கெஜ்ரிவால். இதை அவரிடம் தேர்தல் சமயத்தில் நினைவூட்ட வந்தேன். இந்தமுறை ஆம் ஆத்மி தமிழகத்தில் போட்டியிடவில்லை. இதனால், அவர்கள் சார்பில் போட்டியிடும் எங்களுக்கு அந்த கட்சி ஆதரவு அளிக்கும்.

    இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்றும் நட்பு மட்டுமே என்றும் கூற முடியாது. காரணம் எங்களுக்கு இடையில் வளர்ந்த நட்பே அரசியலினால் தான். எங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு முதல் குரல்கொடுத்து ஆரம்பித்தவரே அவர் தான். அவருக்கு நேரம் கிடைக்கும் போது தமிழகத்திற்கு வந்து எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தோம்.’

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையில் கூட்டணிகள் அமைந்தது போல கமலின் கட்சியும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இதுகுறித்து கமல் கூறும்போது, ‘தேவைப்பட்டால் தனித்து போட்டியிடுவோம். கூட்டணிக்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. எல்லோருடனும் கைகுலுக்கி விட முடியாது என்பதில் திண்ணமாக இருக்கிறோம். மக்களுக்கு உணவு பரிமாறும்போது எங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பேராசை தான் காரணம். எங்கள் அழுத்தமான முடிவை டெல்லி முதல்வர் பாராட்டினார்.’ என்றார்.

    நேற்று பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக எழுந்துள்ள புகார் மீதும் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார். ‘அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு துணையாக, எங்கள் நாட்டைப் பாதுகாக்கும் படையினர் வரமாட்டார்கள் என நம்புகிறேன்.

    எனவே, அவர்கள் நாட்டை காப்பதற்கான கடமையை செய்துள்ளார்கள். ஒரு பெரிய நாடு தன்னைக் காத்துக்கொள்ள என்ன செய்யுமோ, அதையெல்லாம் அவர்கள் செய்து இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்’ எனத் தெரிவித்தார்.

    பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்து பேசினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் டெல்லி தலைமையை சந்தித்து பேசிவிட்டு வந்ததாக செய்திகள் வெளியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே உள்ள நட்பின் அடிப்படையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்துள்ளார். அப்போது தமிழக தேர்தல் குறித்து கமல் பேசியுள்ளார்.

    அதற்கு பிரகாஷ் காரத், இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். தமிழகத்தில் தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம்.

    இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்து விட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #ParliamentElection


    Next Story
    ×