search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை ஏற்றது
    X

    புல்வாமா தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை ஏற்றது

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை இன்று ஏற்றது. #NIAprobe #Pulwamaattack
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2019 அன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இச்சம்பவத்துக்கு பின்னர் தாக்குதல் நடந்த பகுதிக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த உயரதிகாரிகளும், தடயவியல் வல்லுனர்களும் அங்கு விரைந்து சென்றனர். இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்போருட்களின் அளவு மற்றும் வீரியம் தொடர்பான தடயங்களை சேகரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குறிப்புகளை அனுப்பி வைத்தனர்.

    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொள்வதாக பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணையை இன்று ஏற்றுக் கொண்டது. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்னர் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட அல்லது உயர் நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி வந்தன. 

    இந்த நடைமுறையில் சில பாகுபாடுகள் உள்ளதாக கருதிய மத்திய அரசு பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கவும், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கவும், பயங்கராவாதிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை என்ற அமைப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். #NIAprobe #Pulwamaattack 
    Next Story
    ×