search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தொடர் போராட்டம்- மணிப்பூர் தலைநகரில் 144 தடை உத்தரவு
    X

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தொடர் போராட்டம்- மணிப்பூர் தலைநகரில் 144 தடை உத்தரவு

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், இரண்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #CitizenshipAmendmentBill #ManipurProtest
    இம்பால்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அசாம், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாகலாந்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூர் மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு சமூக அமைப்புகள் தனித்தனி குழுக்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் இம்பால் நகரில் உள்ள 4 பெண்கள் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெண்கள், பிரதான மார்க்கெட்டில் அமர்ந்து தர்ணா போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடு திரும்ப மறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து  போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் 6 பெண்கள் காயமடைந்தனர். இதேபோல் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது.



    இவ்வாறு போராட்டம்  தீவிரமடைந்திருப்பதால் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி விலகும், என மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியது குறிப்பிடத்தக்கது. #CitizenshipAmendmentBill #ManipurProtest
    Next Story
    ×