search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாரதா சிட்பண்ட் மோசடி- கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ விசாரணை
    X

    சாரதா சிட்பண்ட் மோசடி- கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ விசாரணை

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று மேகாலயாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பியது. அவர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில், சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று சிறிது நேரம் விசாரித்து விட்டு பின்னர் விடுவித்தனர்.

    சிபிஐ அதிகாரிகள் தடுக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



    இதையடுத்து, கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் பிப்ரவரி 9-ம் தேதி விசாரணை நடத்துவதற்காக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து கமிஷனர் ராஜீவ் குமார் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தார். அவருடன் மாநில போலீஸ் அதிகாரிகள் 3 பேர் வந்தனர். இதேபோல் சிபிஐ தரப்பில் கமிஷனரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து 10 அதிகாரிகள் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தனர்.

    இன்று சிபிஐ அலுவலகத்தில் கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாரதா நிறுவன மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக, கமிஷனரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதற்கிடையே, சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    Next Story
    ×