என் மலர்

  செய்திகள்

  சட்ட விரோத பண பரிமாற்றம்: ராபர்ட் வதேராவிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
  X

  சட்ட விரோத பண பரிமாற்றம்: ராபர்ட் வதேராவிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். #RobertVadra #ED
  புதுடெல்லி:

  மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது.

  இந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா காங்கிரஸ் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அரசு நிலத்தை தனது நிறுவனத்துக்கு வாங்கி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு விற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பிறகு அவர் ராணுவம், பெட்ரோலியம், நிலக்கரி உள்பட பல்வேறு அமைச்சகங்களில் ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்க பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

  மேலும் அவர் லஞ்சப் பணத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

  சமீபத்தில் இந்த விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சார்பில் ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வந்தார்.

  இதையடுத்து அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் என்று தகவல் வெளியானது. உடனடியாக ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு செய்தார். கடந்த 2-ந்தேதி இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு பிப்ரவரி 16-ந்தேதி வரை ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

  அதே சமயத்தில் அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது.

  நேற்று பிற்பகல் 3.47 மணிக்கு டெல்லி ஜாம் நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார்.

  கடந்த மாதம் 23-ந் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா தனது வெள்ளை நிற டொயட்டோ காரில் ராபர்ட் வதேராவை அழைத்து வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் விட்டு சென்றார். இதுபற்றி அவர் கூறுகையில், ராபர்ட் வதேரா எனது கணவர். அவர்தான் என் குடும்பம். அவருக்கு ஆதரவாக நான் இருப்பேன்” என்றார்.

  இதற்கிடையே அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்ற ராபர்ட் வதேராவை அமலாக்கத்துறை இணை இயக்குனர் மற்றும் இரண்டு உதவி இயக்குனர்கள் தலைமையிலான குழு ஒன்று விசாரிக்க தொடங்கியது. ராபர்ட் வதேராவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் நேற்று கேட்கப்பட்டன.


  ஒவ்வொரு கேள்விக்கும் ராபர்ட் வதேரா தன் கைப்பட எழுத்துப்பூர்வமாக பதில் எழுதி தரும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் விசாரணை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. ராபர்ட் வதேராவிடம் அதிகாரிகள் லண்டனில் உள்ள 9 சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

  இதில் 2 சொத்துக்களின் மதிப்பு ரூ.85 கோடியாகும். மற்ற 7 சொத்துக்களின் மதிப்பு தெரியவில்லை. ஆனால் ராபர்ட் வதேரா தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று மறுத்தார். இதுபற்றி அவர் விரிவாக எழுதி கொடுத்துள்ளார்.

  ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரி பற்றி தெரியுமா? என்றும் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் அவர் தெரியாது என்றே பதில் அளித்தார்.

  இதைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று இரவு 9.40 மணிக்குதான் விசாரணை முடிந்தது. அதன் பிறகு ராபர்ட் வதேரா தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதே வெள்ளை நிற டொயட்டோ கார் அவரை அழைத்து சென்றது.

  இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ராபர்ட் வதேரா 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். இதற்காக அவர் 11.25 மணிக்கு ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார்.

  அவருக்கு முன்னதாக அவரது வக்கீல்கள் அங்கு வந்து காத்திருந்தனர். அவர்களுடன் அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அதன்பிறகு வதேராவை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

  இன்றும் அவரிடம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். லண்டனில் உள்ள 9 சொத்துக்களும் வேறு வேறு பெயர்களில் எப்படி வாங்கப்பட்டது என்று இன்றும் அவரிடம் துருவி துருவி விசாரணை நடந்தது.

  இன்று மதியத்துக்கு பிறகும் வதேராவிடம் விசாரணை நீடித்தது. அவர் அளித்த சில தகவல்கள் வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  சொத்துக்கள் வாங்கியதற்கு பணம் எங்கிருந்து வந்தது? என்பதுதான் அமலாக்கத்துறையின் முக்கியமான கேள்வியாக உள்ளது. அதற்கு வதேரா எத்தகைய பதில் அளித்து உள்ளார் என்பது தெரியவில்லை.

  இதற்கிடையே ராபர்ட் வதேரா வருகிற 12-ந்தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடந்த அரசு நிலம் மோசடி தொடர்பாக வதேராவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

  இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் வதேராவை மத்திய அரசு துன்புறுத்துவதாக கூறி பிரியங்கா பிரசாரத்தை தீவிரப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. #RobertVadra #ED
  Next Story
  ×