search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருவாயில் வரலாற்று சாதனை படைக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவனம்
    X

    வருவாயில் வரலாற்று சாதனை படைக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவனம்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் வருவாய் ஈட்டுவதில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு சாதனை படைக்க உள்ளது. #EVMrecordrevenue
    ஐதராபாத்:

    இந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆனால், வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனமான, எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் ஆப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தயாரிப்பதற்காக புதிய ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இசிஐஎல் தனது  53 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக வருவாய் ஈட்டி புதிய சாதனையை எட்ட உள்ளது.



    புதிய ஆர்டர்களுடன், பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக புதிய எம்3 ரக இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இசிஐஎல் நிறுவன வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.1275 கோடியாக இருந்தது. 2018-19 நடப்பு நிதியாண்டில், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வாங்குவதற்காக இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையம் ரூ.1800 கோடிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதனால், இந்த நிதியாண்டின் இசிஐஎல் நிறுவனத்தின் வருவாய் ரூ.2400 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிறுவனம் ராணுவத்திற்கான மின்னணு மின்சுற்றுகள், அணு உலைகளில் பயன்படும் ரேடியோக்கள், செயலற்ற தன்னியக்க மறுபயன்பாடு சாதனங்கள் போன்ற கருவிகளையும் தயாரித்து வருகிறது. 2017-18 ஆண்டுக்கான அறிக்கையில், அணு சக்தியுடனான இந்திய மின்னணு தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்போது, நடப்பு நிதியாண்டில் ரூ.1800 கோடிக்கு வருவாய் இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து அதிகாரி கூறுகையில், ‘ 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பிற்கு மொத்தமாக ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டின் வருவாய் ரூ.2600 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய இயந்திரங்களுக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் தயாரித்து வழங்கும்போது நிறுவனத்தின் வருவாய் மேலும் உயரும்’ என கூறினார்.

    பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பில் மற்றொரு முக்கிய நிறுவனமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா தேர்தல்களில் இந்நிறுவனத்தின் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. #EVMrecordrevenue
    Next Story
    ×