search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் - 7 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தவறாக வெளியிட்டது யார்? - விசாரணை நடத்த உத்தரவு
    X

    பாராளுமன்றம் - 7 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தவறாக வெளியிட்டது யார்? - விசாரணை நடத்த உத்தரவு

    பாராளுமன்றம் மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தவறாக வெளியிட்டது யார்? என்று தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. #Election #Parliament

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 7 மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பாராளுமன்றம் மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல் குறித்து தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் 9 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், காஷ்மீர், மராட்டியம், அரியானா ஆகிய 7 மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், இதன் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவும் குறையும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் சமூக வலை தளங்களில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை என்ற பெயரில் ஒரு பட்டியல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் இதுபோன்று வெளியான தகவல்கள் தேர்தல் கமி‌ஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து இந்த விவகாரத்தை கருத்தில் கொண்ட தேர்தல் கமி‌ஷன் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.

    தேர்தல் அட்டவணை முதன் முதலில் எங்கு இருந்து பரவியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Election #Parliament

    Next Story
    ×