search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்: காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு
    X

    நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்: காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு

    நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு மக்களைவயில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு செய்தது. #TripleTalaq
    முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அங்கு முடங்கிவிட்டது. எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் ஆறுமாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

    எனவே, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மக்களவையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதா விவாதம் இன்று நடைபெற்றது.

    விவாதத்தின்போது பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வற்புறுத்தின. ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது.

    இதனால் விவாதம் முடிந்தவுடன் சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார். வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது.

    குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×