search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - வெளிநாட்டு இடைத்தரகருக்கு 7 நாள் விசாரணை காவல்
    X

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - வெளிநாட்டு இடைத்தரகருக்கு 7 நாள் விசாரணை காவல்

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதித்தது. #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

    துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். பின்னர், அவர் ஒருவார காலம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மைக்கேல் தனக்கு சிறையில் சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சிறை நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

    அந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என மைக்கேல் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    அப்போது கோர்ட்டில் ஆஜரான பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேல் தொடர்பான வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக அவரிடம் விசாரிப்பதற்காக 15 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்குமாறு கேட்டு கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள்  கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி அளித்துள்ளார். #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel 
    Next Story
    ×