search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தடை
    X

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தடை

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது. #BJPRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மீதான தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பா.ஜனதா யாத்திரை நடத்தினால் மத ரீதியான சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அதற்கு மாநில அரசு தடை விதித்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமி‌ஷனர்களும் அனுமதி மறுத்து விட்டனர்.

    இதை எதிர்த்து பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பா.ஜனதா யாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

    இந்த நிலையில் ஒரு நீதிபதி உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி தபசிங் கர்குப்தா, நீதிபதி அரிந்தம் முகர்ஜி அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தனர். அவர்கள் பா.ஜனதா ரத யாத்திரைக்கு அனுமதி அளித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் மற்றும் உளவுத்துறை அளித்த அறிக்கைகளை நீதிபதி ஆய்வு செய்ய தவறி விட்டார். எனவே இதுபற்றி மீண்டும் ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கை அதே நீதிபதிக்கே திருப்பி அனுப்புவதாக தெரிவித்தனர்.

    31 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் 5 கமி‌ஷனர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

    பா.ஜனதா இந்த மாதம் இறுதியில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இன்று முதல் ஜனவரி 1-ந்தேதி வரை கோர்ட்டுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் ஜனவரி மாதத்தில்தான் ரத யாத்திரை தொடர்பான தீர்ப்பு வரும். இதனால் திட்டமிட்டப்படி ரத யாத்திரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கொல்கத்தா ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறை கால பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்போவதாக பா.ஜனதா தெரிவித்து உள்ளது. #BJPRally

    Next Story
    ×