search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்
    X

    மத்தியப்பிரதேசம் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் ஆனந்தி பென் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Kamalnath #MadhyapradeshCM
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவுகளில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்தது. மறுநாள் அதிகாலைவரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி திணறியது.

    அம்மாநிலத்தில் உள்ள 300 சட்டசபை தொகுதிகளில் 114 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியது.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் உள்ள ஜம்பூரி திடலில் இன்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.



    இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்தியப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்ற அசோக் கெலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #Kamalnath #MadhyapradeshCM

    Next Story
    ×