search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் 4வது முறையாக 144 தடை உத்தரவு நீடிப்பு
    X

    சபரிமலையில் 4வது முறையாக 144 தடை உத்தரவு நீடிப்பு

    சபரிமலையில் 144 தடை உத்தரவை இன்று முதல் 8-ந்தேதி வரை நீடிப்பு செய்து பத்தனம்திட்டா கலெக்டர் அறிவித்துள்ளார். 4-வது முறையாக இந்த நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. #Sabarimala #Section144
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக தற்போது கோவில் நடை திறந்துள்ளது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் இதுபோன்ற போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்களின் வருகையும் இந்த ஆண்டு குறைந்து உள்ளது.

    சபரிமலையில் 144 தடை உத்தரவை பத்தனம்திட்டா கலெக்டர் நீடிப்பு செய்து அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல் 8-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. 4-வது முறையாக இந்த நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடை உத்தரவு இளவங்கல் முதல் சன்னிதானம் வரை அமலில் இருக்கும். அதே சமயம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சரணகோ‌ஷம் எழுப்பவோ, நாமஜெபம் நடத்தவோ தடை இல்லை.

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள், போலீஸ் கெடுபிடிகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமன், ஸ்ரீஜெகன், முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவை கேரள ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர்கள் முதலில் நிலக்கல், பம்பையில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று 2-வது நாளாக சபரி மலை சன்னிதானத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பக்தர்களுக்கு கழிவறை, குளியல் அறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் திருப்தியாக உள்ளதாக தெரிவித்தனர். போலீஸ் கெடுபிடி மட்டும் அதிகமாக இருப்பதாக குழுவினர் கூறினர்.

    ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழு சபரிமலை சன்னிதானத் தில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

    இந்த 3 பேர் குழு வருகிற 10-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், பக்தர்களிடம் போலீசாரின் கெடுபிடியை கண்டித்தும் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் கேரள தலைமை செயலகம் முன்பு இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். பா.ஜனதா எம்.பி. சுரேஷ்கோபி, ஓ.ராஜ கோபால் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதே கோரிக்கைக்காக காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான சிவக்குமார், அப்துல்லா, ஜெயராஜன் ஆகியோர் சட்டசபை முன்பு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்களை முதல்-மந்திரி பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது போராட்டத்தை கைவிடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.  #Sabarimala #Section144
    Next Story
    ×