search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்ப கேரள ஐகோர்ட்டு அனுமதி
    X

    சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்ப கேரள ஐகோர்ட்டு அனுமதி

    சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்புவதை நிறுத்துமாறு சொல்லக்கூடாது என்று போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கு விளக்கம் கேட்டுள்ளது. #KeralaHC #SabarimalaTemple
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், ஐயப்பன் கோவில் போராட்ட களமாக மாறியது. அதை தடுக்க கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள மாநில அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று அந்தமனுக்கள், நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, கோவிலில் பக்தர்களுக்கு வசதி செய்து தருமாறு தாங்கள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல், தடை உத்தரவு பிறப்பித்த கேரள அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் கூறியதாவது:-

    ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று சரண கோஷம் எழுப்புவதில் தவறு இல்லை. சரண கோஷம் எழுப்புவதை நிறுத்துமாறு போலீசார் சொல்லக்கூடாது. கோவிலுக்கு குழுவாக செல்லலாம்.



    கோவிலுக்கு வருபவர்களில் உண்மையான பக்தர்களையும், போராட்டக்காரர்களையும் போலீசார் எப்படி வேறுபடுத்தி பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

    சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கான சூழ்நிலை பற்றி கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது பற்றி பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். சன்னிதானத்தில் கட்டுப்பாடுகள் விதித்தது பற்றி கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    நடைப்பந்தலில் என்ன நடந்தது என்பது பற்றிய வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும். அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த எத்தனை போலீசார் பணி அமர்த்தப்பட்டனர் என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணிக்கு, குற்றப்பின்னணி கொண்ட போலீஸ் ஐ.ஜி.யையும், சூப்பிரண்டையும் அனுப்பியது யார்? அவர்களுக்கு மலையாளம் தெரியுமா? ‘சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்தை அவர்கள் ஏன் குற்றமாக கருதுகிறார்கள்?

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர். #KeralaHC #SabarimalaTemple

    Next Story
    ×