search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தீபாவளிக்கு பிறகு அபாய அளவை தாண்டியது காற்று மாசு
    X

    டெல்லியில் தீபாவளிக்கு பிறகு அபாய அளவை தாண்டியது காற்று மாசு

    டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு இன்று காற்று மாசு அளவு அபாய அளவைத் தாண்டியது. #DelhiPollution #AirPollution #Diwali
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது.

    காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.

    தீபாவளி பண்டிகைக்கு முன், காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு மிக மோசம் என்ற அளவில், 345 என்ற அளவிற்கு மாசு அதிகரித்தது.



    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, அமெரிக்க தூதரக பகுதி மற்றும் சாணக்யபுரி பகுதியில் 459, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.

    டெல்லியில் இன்று காலையில் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை மூடியிருந்தது. புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர். புகையில் இருந்து காத்துக்கொள்ள பலர் முகமூடி அணிந்து சென்றனர். #DelhiPollution #AirPollution #Diwali
    Next Story
    ×